search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பி வேலுமணி"

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவையில் உள்ள மானியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றனர். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை அவரது அமைச்சகத்தில் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அமைச்சர்கள் அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதிக்குழு 2017-18-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியத்தின் 2-வது தவணையாக ரூ.1,390 கோடி ஒதுக்குவதற்கு நீங்கள் தலையிட்டு, தொடர்ச்சியாக உதவி புரிந்ததற்காக நன்றி தெரிவிக்கிறோம்.

    2017-18-ம் ஆண்டு செயல்திறன் மானியமாக ரூ.560.15 கோடியும், நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான 2018-19-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ.3,216.05 கோடியும் வழங்கவேண்டியது நிலுவையில் உள்ளது.

    தமிழக மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்குவதற்கு நிதி இல்லாமல் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தவித்து வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியம் மற்றும் செயல்திறன் மானியம் ஆகியவற்றை மத்திய நிதி குழு ஒப்புதல் அளித்து விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் தமிழ்நாடு பொதிகை இல்லத்துக்கு அமைச்சர்கள் திரும்பினர். அப்போது அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    14-வது நிதிக்குழு மானியத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை உடனே பெற்றுத்தருமாறு ராணுவ மந்திரியிடம் கோரிக்கை வைத்தோம். கஜா புயலுக்கும் நிவாரண நிதியை உடனே அளிக்குமாறு கேட்டோம். நிதி கேட்க டெல்லிக்கு தொடர்ந்து வந்ததால்தான் 2 தவணைகள் வாங்க முடிந்தது.

    தேர்தல் கூட்டணி பற்றி முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முடிவு எடுப்பார்கள். கூட்டணி பற்றி நாங்கள் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து, மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக எம்.பி.க்கள் நடத்திய கூட்டத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். தமிழகத்துக்கு எதிரான அந்த கூட்டத்தில் ஏன் பங்கேற்றீர்கள்? என்று அவரிடம் கேட்டீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்டார்.

    அதற்கு வேலுமணி பதில் அளிக்கையில், கர்நாடகத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி. என்ற முறையில் அவர் அந்த கூட்டத்துக்கு போயிருப்பார். மேகதாது அணையால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள், பிரச்சனைகளை சொல்வதற்காகக்கூட போயிருக்கலாம். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அவரும் அப்படித்தான் இருப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

    நிதி தொடர்பான கோரிக்கை வைக்க நிதித்துறை மந்திரி இருக்கும்போது, ராணுவ மந்திரியை சந்திக்க காரணம் என்ன? என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் கூறுகையில், உங்களது கண்ணோட்டமே தவறு. நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். கஜா புயலால் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் அதற்கு தேவையான நிதியை பெற்றுத்தருமாறு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் அவரை சந்தித்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்றார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அமைச்சர் வேலுமணி இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். #TNMinisters #SPVelumani #thangamani
    எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொருளற்ற புலம்பல்களுடன், நெறியற்ற அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் நேற்று வெளியிட்ட, ஸ்மார்ட் சிட்டி என்ற சீர்மிகு நகரம் பற்றிய அறிக்கை, அதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

    சீர்மிகு நகரங்கள் அமைக்கும் பணிகளில் மாதங்கள் பல ஆகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் வழிமொழிந்திருக்கிறார். இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து அவர் சிறிதும் அறிந்திருக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

    கடந்த ஓராண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 11 சீர்மிகு நகரத் திட்டங்களிலும், இத்திட்டப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்திய அளவில் முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டின் சீர்மிகு நகரங்கள் முக்கிய இடங்களை பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும்.

    சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு 33 திட்டங்கள் எடுக்கப்பட்டு, 20 பணிகள் ரூ.310 கோடியில் முடிக்கப்பட்டும், நடைபெற்றும் வருகிறது. 12 பல்வேறு திட்டங்கள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பணி தொடங்கும் நிலையில் உள்ளது.

    இவற்றில், நவீன முறையில் நகரம் முழுமைக்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்து தான் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

    சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகரில் அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியால் திறந்தவெளி மின்னணு ஒப்பந்தப்புள்ளி 22.2.2018 அன்று கோரப்பட்டது.

    இதற்கான ஒப்பந்தப்புள்ளி கடைசி நாளாக 28.3.2018 அன்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியின் தொழில்நுட்ப தகுதிக்கான கூட்டம், 13.3.2018 அன்று நடத்தப்பட்டது. இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.

    பின்னர், தொழில்நுட்பத் தகுதி பெற்ற மூன்று நிறுவனங்களான எல் அண்டு டி நிறுவனம், மெட்ராஸ் செக்யூரிடி பிரிண்டர்ஸ் நிறுவனம் மற்றும் கெல்ட்ரான் நிறுவனத்திற்கு அழைப்புகள் கொடுக்கப்பட்டு, 4.6.2018 அன்று இந்நிறுவனங்களின் தொழில்நுட்ப அம்சங்களை தொழில் நுட்பக்குழு மதிப்பீடு செய்தது.

    அதன் பின்னரே விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டன. குறைந்த ஒப்பந்தப்புள்ளி விலைவிகிதம் அளித்த ஒப்பந்ததாரரான கெல்ட்ரான் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

    சென்னை தவிர பிற மாநகராட்சிகளில் உள்ள 10 சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தும் ஒப்பந்தப்புள்ளி எல் அண்டு டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கெல்ட்ரான் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதில். 3.9.2018 வரை இருக்கின்ற நிலையே நீடிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    விசாரணை நிலுவையில் உள்ள வழக்கு பற்றி அறிக்கைவிடுவது, நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகும் என்பதை அறியாத மு.க.ஸ்டாலினின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமானதாகும்.

    ஒளிவு மறைவற்ற மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையில் தேர்வு செய்யப்பட்ட, கேரள மாநில அரசு சார்ந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் நிறுவனத்திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், அதை பினாமி நிறுவனமென என குற்றஞ்சாட்டி இருப்பது மிகுந்த உள்நோக்கம் கொண்டதாகும்.

    மு.க.ஸ்டாலினின் குடும்ப உறவினர்கள் உள்ளடக்கிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் எதிர்க்கட்சி தலைவரின் பினாமி நிறுவனங்கள் என்று குற்றம் சுமத்தினால் ஏற்றுக்கொள்ளத் தயாரா?

    எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தங்கள், அமைச்சரின் பினாமிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத உத்தரவு போடப்பட்டதாக செய்திகள் வருகின்றன என்றும் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


    தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றி அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள், வெளிப்படையான ஒப்பந்த விதிமுறைகளைப் பின்பற்றியே இறுதி செய்யப்படுகிறது.

    எல்.இ.டி. ஒப்பந்தப்புள்ளியில் பிலிப்ஸ், கிராம்ப்டன், ஸ்ரேட்டர், பஜாஜ், சூரியா, ஆஸ்ரம், ஹெவல்ஸ் போன்ற முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் பங்குபெற்று குறைந்த ஒப்பந்தப்புள்ளி அளித்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.

    உள்ளாட்சித்துறையில் நிகழ்த்தியுள்ள அரும்பெரும் சாதனைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் விரும்பினால் மக்கள் மன்றத்தில் தனி மேடை அமைத்தோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா?

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இந்திய அளவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். இத்தகைய அவதூறுகளை தமிழக மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×